Monday, December 29, 2008

வருக 2009

எழுந்த பெட்ரோல் விலை குறையட்டும்
வீழ்ந்த பொருளாதாரம் எழுகட்டும் !

பங்கு சந்தைகள் ஏறட்டும்
பணவீக்கம் தணியட்டும் !

நித்தம் ஒரு குண்டு என்ற
நிலைமை மாறட்டும் !
நிம்மதியாய் மக்கள்
பெரும் மூச்சு விடட்டும் !

போருக்கு அஞ்சும் அரசியவாதிகளை
வரும் ஆண்டு மாற்றட்டும் !
மரணம் என்பது பொதுவென்று
எதிரிக்கு நம் படை காட்டட்டும் !

இடிந்த போன தமிழீழம்
இனி மேலாவது வாழட்டும் !
இலங்கையின் அரசியலுக்கு
இயற்கை பதில் சொல்லட்டும் !

ஈழத்தை பற்றி பேசும் போது
காதை கூர்மையாய்
தண்ணீர் பற்றி பேசும் போது
மந்தமாய் கேட்கும் காதுகள்
தெளிவாய் கேட்கட்டும் !

மரங்களாக வாழ்ந்த தமிழர்கள்
புத்தாண்டில் மனிதனாக வாழட்டும் !

('கவிஞர்களின் பார்வையில் அண்ணா' நூல் வெளியீட்டு விழாவில் சொன்ன கவிதை )

Friday, December 19, 2008

என் பார்வையில் அண்ணா

பகுத்தறிவு பெரியார் பேச்சில் - செருப்பை
பரிசாய் பெற்ற போது…
பக்குவமாய் பேசி - மக்களிடம்
பல கை தட்டல்கள் பெற்றவர் !

பயணங்களில் நண்பர்களை தவிர்த்து
புத்தங்களை நண்பர்களாக கொண்டவர் !
பதவி வந்ததும் தன் சம்பளத்தை
பாதியாய் குறைத்து ஆடம்பரத்தை தவித்தவர் !

சுயமரியாதை திருமணத்தை
சட்டமாய் அரங்கேற்றியவர் !
சென்னைக்கு ‘தமிழ் நாடு’ பெயரிட்டு
சரித்திரப் பக்கங்களில் முத்திரை பதித்தவர் !
தள்ளி இருந்த திருவள்ளுவரை
திரும்பும் அரசு அலுவலகத்தில் மாட்டியவர் !
பேச்சும், எழுத்தும் தன் கட்சியின்
பெரும் சொத்தாக கருதியவர் !

நித்திரை பொழுதிலும்
முத்திரை பேச்சால்
ஒவ்வொரு இரவும் நினைவில் நின்றார் !
தீ பறக்கும் முயற்சியால்
தமிழர்கள் இல்லங்களில்
தீபங்கள் ஏற்றினார் !

'அண்ணா' என்ற உறவு
அண்ணாதுரை பெயரால் சிறப்பானது !
திராவிடக் கழகத்தால்
தமிழனின் முத்கெலும்பு நிமிர்ந்தது !

நூறு கவிஞர்கள் எழுதிய 'கவிஞர்களின் பார்வையில் அண்ணா' என்ற தொகுப்பு நூலில் இக்கவிதை இடம் பெறுகிறது.

Wednesday, December 17, 2008

ஞாபகங்கள்

பள்ளி பருவத்தில் பிரிந்த தோழனை
நடு சாலையில் அழுது வாங்கிய பொம்மை
விளையாட்டில் நண்பனிடம் போட்ட சண்டை
தந்தை கரம் பிடித்து நடந்த நடை
நினைத்தால் நரம்புகளும்
நவரச கீதம் பாடும் ஞாபகங்கள் !

பகைமை தூண்டிவிடம் நினைவுகள்
காமத்திற்காக காதலிக்கும் காதலர்கள்
கருணை மறந்த கள்வர்கள்
கர்மத்தை செய்து காலத்தை ஓட்டுபவர்கள்
நினைத்தால்
நித்திரை கெடுக்கும் ஞாபகங்கள் !

மறதியை பரிசளித்த இறைவனே
தேவையில்லாவற்றை அழித்து விட்டு
தேவையானவற்றை நினைவுப் படுத்த....
கணிப்பொறிப் போல்
மனதை படைத்தால் என்ன ?

தேவையில்லாத ஞாபகங்களின்
உன் ஞாபகத்தை மறந்தேன் !
பல மதக்குழப்பத்தில்
நீயும் என் ஞாபகத்தை மறந்தாய் !

மறதிலும் இறைவன்
ஞாபகமாய் சொன்னான் -

“மறதி மனிதனுக்கு மட்டுமல்ல
மகேஸ்வரனுக்கும் பொதுவென்று”

அறிமுகம்

கருவில் வந்த குழந்தைக்கு
அன்னையின் ஸ்பரிசம் அறிமுகம் !
உறவினர்கள் தீண்டலில்
குழந்தைக்கு கண்ணீர் அறிமுகம் !
கண்ணீர் சிந்தி செல்லும் போது
பள்ளிக்கூடம் அறிமுகம் !
விளையாட்டில் நண்பர்களிடம்
போடும் சண்டை அறிமுகம் !

கன்னியிடத்தில் வரும்
முதல் காதல் அறிமுகம் !
ஜனனம் வாழ்க்கையின்
தொடக்கத்தின் அறிமுகம் !
மரணம் வாழ்க்கையின்
முடிவில் அறிமுகம் !
மற்ற அறிமுகங்கள் வரும் நாட்களில் ...
பழகிய முகம் !

முதல் தேர்வு
முதல் போட்டி
முதல் காதல்
முதல் முயற்சி
அனைத்திலும் வென்றவர்
வரலாறு படைப்பதில்லை !

தோல்வியின் அறிமுகத்திற்கு அஞ்சினால்
வெற்றியின் அறிமுகம் கிட்டாது !
வெற்றி கிட்டும் வரை
உன் பிறப்புக்கு மதிப்பு கிடையாது !

மரணத்திற்கு நீ அறிமுகம் ஆகும் முன்பு
உலகிற்கு அறிமுகம் ஆகிவிடு !

உலகிற்கு நீ அறிமுகம் ஆகும் போது
உன் வெற்றி மட்டுல்ல ...
தோல்விகளுக்கும் வரலாறு ஆகும் !

ஓவ்வொரு தோல்வியில் கற்றுக்கொள் !
வெற்றிக்கு அறிமுகம் ஆகும் வரை
தோல்வியை ஏற்றுக்கொள் !

Monday, December 15, 2008

தொலைப்பேசி தேவதை

கடன் அன்பை முறிக்கும் என்பார்கள். ஆனால், கடன் கொடுப்பாதற்காகவே நீ என்னை தொலைப்பேசியில் தொடர்புக் கொண்டாய்.

" நாங்க XXX வங்கியில இருந்து பேசுறோம். உங்க சம்பள தகுந்த மாதிரி உங்களுக்கு Personal loan தரோம். உங்களுக்கு லோன் வேணுமா...?" - இரண்டே வரியில் முடிந்தது உன் குரல்... இல்லை உன் குறள்.

என்னை கடனாளியாக்குவதில் உனக்கு எத்தனை ஆசையோ ? இது போன்ற தொலைப்பேசிகளை துண்டிப்பவன் நான். ஆனால், உன் குரலை மீண்டும் கேட்பதற்காகவே மீண்டும் மீண்டும் உன் வங்கியின் கடன் விபரங்களை பற்றி கேட்டேன். என்னை கடனாளியாக்கும் ஆர்வத்தில் நீயும் உன் வங்கியின் கடன் விபரங்களை பற்றி சொல்லிக் கொண்டு இருக்கிறாய்.

அப்துல் கலாமின் "தொலை நோக்குப் பார்வை 2020" படித்திருக்கிறேன். ஆனால் தொலைப்பேசி தொடர்புக் கொள்ளும் தேவதை உன் முகம் பார்க்க முடியவில்லை. தொலைப்பேசியில் தினமும் இது போன்ற தொல்லை கொடுப்பாயா ? என்ற கேட்க தோன்றியது.

பணத் தேவை இல்லாத போதும் உன் முகம் பார்ப்பதற்காகவே உங்கள் வங்கியின் சேவையை விரும்பினேன். இதற்காக தான் பெண்களை வைத்து தொலைப்பேசியில் அழைக்க சொல்கிறார்களோ ? அதன் பிறகு நீ கேட்ட கேள்விகள் எல்லாம் என் மனதிலே நிற்கிறது.

உங்களுக்கு எவ்வளவு சம்பளம் ? எங்க வேலை செய்றீங்க ? இதுக்கு முன்னாடி வேற எந்த பேங்க்ல லோன் வாங்கினிங்கலா ? உன் கேள்வி தனைகளை நீ தொடர்ந்துக் கொண்டே போனாய்.

நீ கேட்கும் கேள்விகள் எல்லாம் வங்கி கடன் கொடுப்பதற்காக கேட்பது போல் தெரியவில்லை. என் வாழ்க்கை துணையாக வருவதற்கு கேள்வி கேட்பது போல் இருந்தது.

இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் தொலைப்பேசியில் தொடர்ப்புக் கொள்வது. உன்னை பார்க்கும் ஆசை மனதில் துளிர் விட தொடங்கியது. உனக்காகவே உன் வங்கியில் கடன் வாங்க சம்மதித்தேன்.

என் அலுவலகத்திற்கு ஒருவன் வந்து உன் வங்கியில் இருந்து வருவதாக சொன்னான். உன் வங்கி மிகவும் மோசம். தொலைப்பேசியில் பெண்களை பேசவிட்டு நேரடி தொடர்புக்கு ஆண்களை நியமித்து இருக்கிறார்கள். வந்தவன் நீ தொலைப்பேசியில் சொன்ன உன் வங்கி விதி முறைகளை சொல்லிக் கொண்டு இருந்தான். உன் குரலின் நினைவில் நான் அவன் பேசுவதை கேட்டுக் கொண்டு இருந்தேன்.

மனமோ உன்னை பார்க்க புலம்பியது. என்னால் எனக்கே ஆருதல் சொல்ல முடியவில்லை. என்னை சந்திக்க வந்தவன் வங்கி முகவரி கொடுத்து சென்றான். உன் முகம் காண உன் வங்கி முகவரிக்கு வந்தேன். உன் பெயரை சொல்லி உன் இருப்பிடத்தை கேட்டேன். அதோ அங்கு இருப்பதாக ஒருவர் சொல்ல, சற்று அதரிந்தே உன்னை பார்த்தேன். கோயில் சிலையாக இருக்க வேண்டியவள் வங்கி ஊழியராக இருப்பாதா ? உனக்கும் சேர்த்து என் ஒருவன் வருமானம் பொதும். "வேலையை விட்டு வா" என்று செல்ல என் நாவு துடித்து. அறிமுகம் இல்லாதவனின் வார்த்தையை நீ எப்படி நம்புவாய். இதோ என்னை உனக்கு அறிமுகம் படுத்த என் கால்கள் உன்னை நெருங்க தொடங்கியது.

உன்னை நெருங்கியதும் என்ன பேசுவது என்று தெரியாமல்.... அங்கு இருக்கும் வங்கி ச்சலானை எடுத்து வந்துவிட்டேன். உன்னிடம் பேச மனதில் ஆசையிருக்கும் அளவிற்கு பேசும் வார்த்தைகளில்லை. நீ குரலில் குயில் என்றால், நிறத்தில் முயல் என்று தான் சொல்ல வேண்டும். அந்த நிறமே என்னை பேசவிடாமல் செய்து விட்டது.

உன் வரவுக்காக உன் வங்கி வாசலில் காத்துக் கொண்டு இருந்தேன். உன் அழகில் அதிர்ந்தவனை இன்னொரு அதிர்ச்சி கொடுப்பாய் என்று நினைக்கவில்லை. என் அலுவலகத்திற்கு வந்து உன் வங்கியை பற்றி பேசியவனுடன் வந்துக் கொண்டு இருந்தாய். என் கண் முன்னே நீ அவன் வண்டியில் ஏறி சென்றாய். ஒரு நாள் உன் குரலை கேட்ட எனக்கே உன் மீது ஆசை வரும் போது தினமும் உன்னை பார்ப்பவனுக்கு ஆசை வராதா.....? அவன் எனக்கு முன்பே உன்னை பார்த்ததால் அவன் உன் காதலை வென்று விட்டான். நான் உன்னை பார்ப்பதில் பிந்திக் கொண்டதால்.... நீங்கள் போவதை பின்னாடி இருந்து பார்க்கிறேன்.

Friday, December 12, 2008

மனித உரிமை

மனிதனுக்கு ஓட்டுப்போட உரிமை உண்டு
தேர்ந்து எடுத்த தலைவரை
நீக்க உரிமை இல்லை !

தவறு செய்ய உரிமை உண்டு
தட்டிக் கேட்பவரை வெட்டுப்படுவதால்
நியாயம் கேட்க உரிமை இல்லை !

பிள்ளைகளைக் கருவில் சுமக்க உரிமை உண்டு
லட்சங்கள் இல்லாமல்
கல்லுரியில் சேர உரிமை இல்லை !

மேல்நிலைப் பள்ளி வரை
படிக்க உரிமை உண்டு
ஜாதி இல்லாமல் பள்ளியில்
சேர்க்க உரிமை இல்லை !

போர் நடக்கும் போது
மனித உரிமைகள் பறிக்கப்படும்
-அது இந்திய அரசியல் சட்டம் !

போர் நடக்காத போது
மனித உரிமைக்ள் மீற்ப்படும்
-இது துரோகிகளின் திட்டம் !

மனித உரிமைகள் பறிக்கப்படவில்லை
மனித உரிமைகள் மீறப்படுகின்றன !!

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" கவிதை நூலின் 9வது கவிதை

Thursday, December 11, 2008

வாழ்க ! வாழ்க ! பாரதி வாழ்கவே !!

பாருக்குள்ளே நல்ல நாடு
பாரதி பிறந்த தமிழ் நாடு !
சிந்தனை பிறந்தது எந்நாளாம்
சிந்து பாடும் பாரதி பிறந்த நாளாம் !

தன் திம்தரிகிட பாட்டால்
தமிழனை தட்டி எழுப்பினார் !
தன்னலம் பாராமல் எழுதியதால்
தருமி போலவே வாழ்ந்தார் !

வறுமை, அலச்சல்
ஒரு கவிஞனை உருவாக்கும் சமையல் !
இதை உணர்த்திய
பாரதி ஒரு கவிச் செம்மல் !

அச்சத்தை தவிர்க்க வைத்தாய் !
மானத்தை போற்ற வைத்தாய் !
ரௌத்திரத்தை பழக செய்தாய் !
கவிஞன் பணத்தை திரட்ட
சொல்லி தர மறந்துவிட்டாய் !!

ஆதலால்,
" நான் கவிஞன்
எனக்கு தொழில் கவிதை "
என்று சொல்லும் துணிச்சல் எனக்கில்லை !
எழுத்தும், வறுமையும் ஒன்றாய் ஏற்று
புகழ் கண்ட பாரதி
உன்னை போல் யாருமில்லை !!

வாழ்க பாரதி
வாழ்க பாரதம் !!

( விக்கிரமன், அதீனன், ம.நடராஜன் தலைமையில் பாரதியாரின் 127வது பிறந்த நாள் விழா (11.12.2008) அன்று, எட்டையப்புரத்தில் நடந்தது. அங்கு, 'பாரதி மணி' மண்டபத்தில் நான் சொன்ன கவிதை.)

Tuesday, December 02, 2008

ஜாதிக்கு இளமை குறையவில்லை

ஜாதியை ஒழிக்க வந்த மனிதர்கள்
வயதாகி இறந்தார்கள்
ஆனால்
ஜாதிக்கு இளமை குறையவில்லை!

பிறந்த நாள் சான்றிதழ்
பள்ளிக்கூட சான்றிதழ்
கல்லூரி சேர அனுமதி
திருமணத்துக்குப் பெண் பார்க்க
சுடுகாட்டில் புதைக்க
மனிதர்கள் வயதாகி இறந்தாலும்

ஜாதியை இளமை குறையாமல் வாழவைக்கிறார்கள்!

தமிழ் இளமையுடன் இருப்பதால்
தமிழர்களுக்குப் பெருமை!
ஜாதி இளமையுடன் இருப்பதால்
மனிதர்க்ள் வாழ்கையில் கொடுமை!
ஜாதிக்கு இளமை குறையவில்லை!

மனிதனின் இதயத்தில்
லட்சியம் விதைக்கப்பட்டிருந்தால்
பல வெற்றி மரங்களுக்கு
விதைகள் போட்டிருப்பான்!

மனிதனின் இதயத்தில்
ஜாதி விதைக்கப் பட்டதால்
பல ஜாதி சங்கங்களைத்
தொடங்கி வருகிறான்!

விதைத்த ஜாதியை
வேருடன் அழிக்க
மனிதன் மனிதர்களை
வெட்டி அழித்துக் கொண்டார்கள்
இறந்தது மனிதர்கள் மட்டும் தான்
ஜாதிகள் இல்லை!
ஜாதிக்கு இளமை குறையவில்லை!

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலின் 25வது கவிதை

காதல் கொடுத்த தேவதை

நட்பு என்று ஒரு புனிதம் உண்டு... காதலுக்கென்று புனிதம் உண்டு... இந்த இரண்டுக்கு இடைப்பட்ட உறவு என்றுமே குழப்பம் தான்..... மிகவும் கொடுமை கூட. அவளிடம் பழகுவது காதல் என்று மனம் சொல்லும். ‘நட்பை தவறாக நினைக்காதே’ என்று அறிவு எதிர் வாதம் செய்யும். இந்த குழப்பத்தில் எத்தனையோ இளைஞர்கள் மாட்டிடுக் கொண்டு இருக்க நான் மட்டும் விதி விளக்கா என்ன ?

நான் உன் வீட்டுக்கு வந்துயிருக்கிறேன்.... ஒரு நண்பனாக. நீயும் என் வீட்டுக்கு வந்திருக்கிறாய்... ஒரு தோழியாக. நாம் இருவரின் நட்பு நம் இரு வீட்டுக்கும் தெரியும். இப்பொது உன்னிடம் காதல் சொன்னால், நம் இரு வீடும் நம் இதுவரை பழகிய நட்பை என்னவென்று சொல்வார்கள் ?

நம் பெற்றோர்களை கூட சமாளித்து விடுவேன். நீ என்ன நினைப்பாய் ? இதுவரை நான் உன்னிடம் பழகிய நட்பை நீ தவறாக புரிந்துக் கொண்டால்.... நான் என்ன செய்வேன் ? உன்னிடம் பேசுவதே போதும் என்று நினைத்தாலும்.... சொல்ல வேண்டும் என்று என்னை தூண்டுகிறதே இந்த ‘காதல்’.

‘கடவுள் இல்லை’ என்று சொல்பவன் நான்.... திருநீர் நீ தருவதால் நெற்றியில் புசிக்ககொள்கிறேன். கோயிலுக்கு செல்லாததவன் நான்..... வியாழக்கிழமை ராகவேந்திர கோயிலுக்கு நீ வருவாய் என்பதற்காக நான் வருகிறேன். அவ்வப்போது நீ செய்யும் ஜாடைகள்.... என் மீது உனக்கு காதல் இருக்குமோ என்று நினைக்கும் லீலைகள்... பிறகு அது நட்பு என்று நீ சொல்லும் வார்த்தைகள்... உன் ஒவ்வொரு அசைவுகளையம் என் இதயம் செமிக்கும் வங்கி கணக்குகள்.

உன்னை காதலிக்கும் ஆடவர்களின் பெயர்களை என்னிடம் பட்டியலிட்டு சொல்கிறாய்..... நான் உன்னிடம் என் காதலை சொல்லிவிட்டால்... நானும் உன் பட்டியலில் வந்துவிடுவேனோ என்ற அச்சம் வந்தது.... இருக்கும் கொஞ்ச தைரியம் கூட போனது.

நீ நெருக்கமாக பழகும் ஆண்களை பற்றி சொல்கிறாய்.... எனக்கு பொறாமை ஏற்ற நீ செய்யும் உள் நோக்கமா என்ற சந்தேகம்... ஆனால், நண்பனிடம் தான் எல்லா உண்மையும் சொல்ல முடியும் என்று நீ சொல்லும் போது என் சந்தேகங்கள் எல்லாம் தவிடு பொடியானது.

ஜாடை வார்த்தைகளால் ‘காதல்’ என்று நினைக்க வைக்கிறாய்.... ‘காதல் மீது நம்பிக்கை இல்லை’ என்று சொல்லி உனக்கு காதல் வராது என்று நினைக்க வைக்கிறாய் !
பார்த்தவுடன் காதல் சொல்பவர்கள் உண்டு.... காதலுக்காகவே பெண்ணிடம் பழகி காதல் சொல்பவர்கள் உண்டு.... என் மனம் உன்னிடம் இதுவரை எதையும் எதிர்ப்பார்த்தில்லை. ஆனால் , காதல் தென்றல் வீசிய பிறகு.... நம் நட்பு புயலாக என்னை கொன்று கொண்டு இருக்கிறது. நட்பை கொன்று காதலை சொல்வதா ? காதலை மறந்து நட்பை வளர்ப்பதா ? காதல் வந்த பிறகு தினமும் என் மனதில் இதே போராட்டம் தான்.

திடிர் என்று ஒரு நாள் என்னடம் ஒரு கேள்வி கேட்டாய் “இப்போ ரொம்ப பேரு... பிரண்ட்ஸ் பழகி லவ்வர்ஸ் ஆகுறாங்ளே. அதப்பத்தி நீ என்ன நினைக்குற...?” என்றாய்.

இது தான் சரியான தருணம் நான் பதிலளித்தேன்.
“இன்னைக்கு பல பேர் கல்யாண வாழ்க்கையில எல்லோரும் நண்பர்கள் போல வாழனும் நினைக்கிறாங்க... யாரோ ஒருத்தரை இல்ல ஒருத்தியை கல்யாணம் பண்ணி நண்பர்கள் போல இருக்குறதக்கு... நமக் கூடவே நல்ல பழகினவங்கள காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிறது தப்பில்லனு நினைக்குறாங்க.... கல்யாணத்துக்கு அப்புறம் பிரண்ட்ஸீப் தொடரது நல்ல விஷயம் தானே !! ” என்றேன்.

என் பதில் கேட்டு என்னை பார்த்து மெல்ல சிரித்தாய். நம் நட்பு காதலாக மாறும் என்ற நம்பிக்கையுடன் நம் நட்பின் பயணத்தை தொடர்க்கின்றேன்.
Free Web Counters
வந்தவர்கள்