Sunday, January 18, 2009

செல் பேசும் தேவதை

வண்டியில் செல்லும் போது ரோட்டை தான் பார்த்து செல்ல வேண்டும். அது தான் நமக்கும், மற்றவர்களுக்கும் நல்லது. அப்படி தான் இது வரை வண்டியில் சென்று கொண்டு இருந்தேன். எனோ திடீர் என்று என் மனம் தடுமாற தொடங்கியது. ஒரு காற்று என்னை கடக்கும் போது தடுமாறியது நான் மட்டுமல்ல, என் வண்டியும் தான். சில விபரிதத்தை தவிர்க்க வண்டியை ஒரமாய் நிறுத்தி விட்டு நறுமணம் வீசிய காற்றை தேடினேன். அழகிய காற்றுக்கு சொந்தக்காரியை தேட எனக்கு அதிக நேர தேவைப்படவில்லை. அந்த சாலையோரம் தேவதை நீ மட்டும் தான் இருந்தாய்.

இந்த உலகத்தில் நீயும், நானும் மட்டும் தான் மனித இனத்தை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் எல்லோரும் மிருக இனத்தை சேர்ந்தவர்கள் என்று தோன்றியது. அழகிய தேவதை கண் முன் வந்து விட்டால் ‘மெல்லிய மணம்’ கிறுக்கு தனமாக யோசிக்கும் என்று நினைக்கிறேன். எல்லோரையும் மிருக இனத்தில் சேர்த்து விட்டு எப்படி நம்மை மட்டும் மனித இனத்தில் சேர்த்துக் கொண்டேன் என்று எனக்கே புரியவில்லை. நீ நடந்து செல்வதை மறைப்பது போல் ஒரு சிலர் நடப்பதால் என் மனதில் இப்படி ஒரு எண்ணம் வந்திருக்கலாம். ஆனால், நீ, நானும் ஒரு தனி உலகத்தில் வாழ வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்தேன்.

உன்னை பின் தொடர எனக்கு விருப்பமில்லை. ஆனால், உன் காற்று என் மேல் வீசியதால் நான் உன்னை பின் தொடர்வதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. நீ ஒரு உணவு விடுதிக்குள் நுழைந்தாய். நம் முதல் சந்திப்பு அங்கு தான் தொடங்க வேண்டும் என்றால் யாரால் அதை மாற்ற முடியும். உன் பார்வை என் மீது படும்ப்படி நான் சற்று தொலைவில் அமர்ந்தேன். நீ என்னை பார்க்க மாட்டாயா என்று ஏங்கிய படி ஒரு காபியை கொண்டு வர சொன்னேன். நீ கண்ணத்தில் கை வைத்துக் கொண்டு, லேசாக தலை அசைத்து என்னை பார்த்து சிரித்தாய். ‘இன்ப அதிர்ச்சி’ என்று சொல்லுவார்களே அது இது தானா ! பழகிய முகத்தை பார்த்து சிரிப்பது போல் என்னை பார்த்து சிரித்திருக்கிறாய் ! ஒரு வேளை முன் ஜென்ம பந்தம் என்பார்களே இது தானா ? எனக்கு தோன்றிய அதே ஈர்ப்பு உனக்கும் தோன்றி இருக்க வேண்டும். அதனால் தான் நீ என்னை பார்த்து சிரித்தாய்.

"பெண்கள் சிரிப்பு பல அர்த்தம் உண்டு" என்று உள்ளூர ஒரு குரல் கேட்டது. அந்த குரல் என் மனசாட்சிக்கு சொந்தமானது. தேவதை பார்த்த பிறகு திருக்குறளை மறப்பவர்கள் மத்தியில் என் குரலை நான் மறப்பது தவறில்லையே !! என்னை பார்த்து எதோ வார்த்தை சொல்லி சிரித்தாய். உன் கண் இமைகளும் என்னை பக்கத்தில் வர அழைத்தது. “எந்த பெண்ணாவது தனியாக பேசுவாளா ! உன்னை தான் அழைக்கிறாள் போ" என்று இன்னொரு குரல் என் மனதில் கேட்டது. மூன்று அடி தூரத்தில் நீ செய்யும் ஒவ்வொரு செய்கையும், என் மனம் மூன்னூறு அடி வானத்தில் பறக்கிறது. என் ஆர்வம் என்னை இறுக்கையில் அமரவிடவில்லை. என் கால்கள் உன்னை நோக்கி நடக்க துவங்கின.

நான் உன் அருகில் வந்ததும், நீ “ஒரு ப்ளைன் தோசை" என்றாய். நான் இந்த உணவு விடுதியில் வேலை செய்பவன் அல்ல, உன் காற்றில் கரைந்து போனவன் என்று சொல்ல துடித்தேன். நான் பேச தொடங்கும் முன்பு உன் கையை கண்ணத்தில் இருந்து எடுத்தாய். அப்போது தான் நான் புரிந்து கொண்டேன், இது வரை நீ பேசி சிரித்தது 'Wi-Fi' செல்போனில் என்று.

முதலில் 'Wi-Fi' போனில் பேசுபவர்களை பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும். இவர்கள் போனில் பேசுகிறார்களா, தனியா பேசுகிறார்களா என்று ஒன்றும் புரியவில்லை. அவள் பைத்தியமோ இல்லையோ, அவள் பின்னால் சென்ற நான் பைத்தியக்காரன் என்ற எண்ணத்துடன் அந்த உணவு விடுதியை விட்டு வந்தேன்.

Wednesday, January 07, 2009

ஆங்கிலம் பேசும் தேவதை

இதோ இங்கு எனக்காக தேவதை.... தமிழ் அறியாதவள். ஆனால், தமிழர்கள் மனதை கொள்ளை அடிப்பவள். அவள் தமிழ் பேசி தான் தமிழன் மனதில் இடம் பிடிக்க வேண்டுமா ? பார்வை போதுமே ... எல்லோரையும் சாய்த்து விடுவதற்கு.... அது என்ன தமிழன் மட்டுமா அவள் அழகில் விழுவான். ஆண்மையற்றவனுக்கு கூட பார்வையால் ஆண்மை ஊட்டுபவளாயிற்றே... உலக ஆண்கள் எல்லாம் அவள் பார்வையில் விழுந்து விடுவார்கள்.

எத்தனையோ அரங்கத்தில் தலை நிமிர்ந்த தமிழ் ... இன்று முதன் முதலில் வெட்கம் பட்டிருக்கும்... உன் நாவில் நுழையாததால். நான் அதிகமாக ஆங்கிலம் பேசியதில்லை. அதற்கு இன்று தான் வருந்துகிறேன். நீ பேசுவதை எனக்கு புரிந்தும்.... என்னால் கோர்வையாக பதிலளிக்க முடியவில்லை. உன்னிடம் பேசும் போது என் மனம் எண்ணங்களோடு சண்டைப் போடுவது போல் ஆங்கிலம் என் நாவிடம் சண்டை போடுகிறது.

நான் தமிழிலே கவிதை எழுதி பழகிவிட்டேன்..... என் தமிழ் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தருவாயா ? என்று கேட்கிறாய். ஆங்கிலத்தில் எழுத்துக்களை கோர்த்து எழுத தெரிந்திருந்தால்... நான் உனக்காக ஆங்கிலத்திலேயே கவிதை எழுதியிருப்பேன்.

“தமிழ் இனி மெல்ல சாகும்” என்று எந்த கவிஞன் சொன்னான். உனக்காக தமிழ் சாவை ஏற்றுக் கொள்ளும்... தமிழில் நீ பேசுவதாக இருந்தால்.

என் தேவதை உனக்காக எத்தனை கவிதை வடித்திருக்கிறேன் தெரியுமா..? ஆனால் உன்னால் ஒன்றை கூட வாசிக்க முடியாது.

30 நாட்களில் ஆங்கிலம் கற்று தருகிறோம் என்ற சாலையோர விளம்பரத்தை பார்த்தேன். உன்னிடம் தெளிவாய் ஆங்கிலம் பேசவே அங்கிலம் கற்று வகுப்பிற்கு சேர்ந்தேன். அவர்கள் கற்று தரும் ஆங்கிலம் எனக்கு உதவாது என்று பின்பு தான் அறிந்தேன்.

நான் ரயில் வேகத்தில் ஆங்கிலம் பேசினால்.... நீ விமான வேகத்தில் பேசுகிறாய். நான் ஆங்கிலம் பேசுவதே மிக பெரிய விஷயமாக இருந்தது.... இப்பொது வேகத்தை கூட்ட வேண்டுமா ? என்றே பயந்தேன். எத்தனை பேர் காதலுக்காக வானத்தையே வலைப்பதாக சொல்வார்கள். நான் உனக்காக என் ஆங்கிலத்தின் வேகத்தை அதிகப்படுத்தாமலா இருப்பேன்.

தினமும் தமிழை மட்டுமே உச்சரித்த என் நாவு.... உன்னிடம் ஆங்கிலத்தில் பேச ஒத்திக்கை பார்த்துக் கொண்டது. தமிழில் இருக்கும் உச்சரிப்பு கடினம் இதில்லை.... இருந்தும் உன்னை பார்த்தால் என் நாக்கு குழைகிறது. பரவாயில்லை..... என் தவறுகளை சரி செய்ய நீ இருக்கிறாயே.... என் குழைந்த நாக்கை சரி செய்ய நீ இருக்கும் போது என் நாக்கு எப்படி குழைந்தால் எனக்கென்ன ?
Free Web Counters
வந்தவர்கள்