Thursday, August 28, 2008

ஆத்திகன் நாத்திகம் பேசுகிறான்

கோவை குண்டு வெடிப்பின் போது
வராத மருதமலை முருகர் !
பாதிரியார் எரிக்கும் போது
வராத சிலுவை ஏசுநாதர் !
பாபர் மசூதி இடிக்கும் போது
வராத உருவமில்லாத அல்லா !
குஜராத் மதக்கலவரத்தில் உதவாத
இன்னும் சில கடவுள்கள் !
மனிதர்களின் மரணத்தின் போது
வராத கடவுள்
தனி ஒரு மனிதனின் வேண்டுதலுக்கு
வந்து விடவாப் போகிறார் !

நான் நாத்திகன் அல்ல
கடவுள் இல்லை என்று சொல்வதற்கு...
ஆத்திகன் தான்
இருந்தும்
நாத்திகம் பேசுகிறேன் !

மசூதிக்குச் செல்பவனும்
விபூதி பூசுபவனும்
பண்ணீர் ஏந்தி நிற்பவனும்
மனித நேய மனதை
மத வெறியில் எரிக்கின்றான் !

கீதை நாயகனோ !
கண்கள் மூடிக் கொண்டான்
கூரானின் நாயகனோ !
கடமை மறந்தான்
பைபிளின் நாயகனோ !
பார்த்துக் கொண்டு இருக்கிறான்
இறுதியில்
தீவிரவாதிகளிடம் இருந்து
தன் கோயிலைக்
காப்பாற்றத் தவறினான் !

நான் நாத்திகன் அல்ல
கடவுள் இல்லை என்று சொல்வதற்கு...
ஆத்திகன் தான்
இருந்தும்
நாத்திகம் பேசுகின்றேன் !

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலில் 40வது கவிதை
Free Web Counters
வந்தவர்கள்