Monday, November 10, 2008

வன்முறை தேவதை

எப்படி இவள் என் மனதில் வந்தாள். எதற்காக என் மனம் அவளை விரும்பியது. எனக்கு அவளை தவிர வேறு பெண் தான் பூமியில் இல்லையா என்ன ? இருந்தும் அவளை தேடியே என் மனம் செல்வதை உணர்கிறேன்.

இது வரை அவளிடம் இரண்டு வருடங்களாக தோழியாக கூட பழகவில்லை. அவளிடம் சண்டை தான் போட்டிருக்கிறேன். அவள் அவ்வளவு பெரிய அழகி என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இப்பொது எல்லாம் அவள் தான் எனக்கு அழகியாக தெரிகிறாள்.

அவளிடம் பழகிய ஆரம்ப நாட்களை நினைத்து பார்க்கிறேன். அவளிடம் பேச தொடங்கியதே சண்டையில் இருந்து தான். ஐய்யோஸ! பேச தொடங்கி விட்டால் வாயை மூட மாட்டாள். அவள் மிக பெரிய வாயாடி. யாராக இருந்தாலும் பேசியே விரட்டி விடுவாள்.

என் நண்பன் கூட பல முறை அவளை திமிர் பிடித்தவள் என்று என்னிடமே சொல்லியிருப்பான். நானும் அதை ஆமோதித்து இருக்கிறேன். அவளிடம் யார் மாட்டிக் கொள்ள போகிறானோ என்று பல முறை நானே நினைத்து இருக்கிறேன். அந்த அப்பாவி நானாக இருப்பேன் என்று நானே நினைத்ததில்லை.

கணவன் மனது நோகாமல் நடந்துக் கொள் என்று மகளிடம் தாய் சொல்வது போல் அவளிடம் நோகாமல் நடந்துக் கொள் என் காதலே என்று காதலுக்கு அறிவுரை கூறிக் கொண்டு இருக்கிறேன். ஆனால் என் காதல் அவளை நோகடிக்கவில்லை. என்னை படாத பாடு படுத்திக் கொண்டு உள்ளது.

அந்த திமிர் பிடித்தவளுக்கு என் காதலை சொல்லி விடலாமா என்று நினைத்தேன். அவளிடம் இருக்கும் திமிர் காதலை சொல்ல தடுத்தது ....என் தன்மானம். ஆண்ணிடம் அடக்கமாக நடந்துக் கொள்ளும் பெண்கள் எத்தனையோ பேர் இருக்க ஆண்களை மதிக்காத அவளையா என் மனம் விரும்புவது. என்ன செய்வது காதல் மதியாதார் தலை வைத்து தானே மிதிக்கும்.... காதலுக்கு தன்மானம் சற்று குறைவு தான். அதே சமயத்தில் காதல் தன்மானத்தை இழப்பது பெண் மானத்தை காக்கும் நல்ல பணியில் தான் என்பதால் அதை யாரும் தவறாக நினைப்பதில்லை.

எதோ சில சண்டைகள் போட்டோம். அதன் பிறகு சமாதானம் ஆகிவிட்டோம். இது நட்பு என்று எப்படி சொல்வது ? இலங்கை தமிழர்கள் பிரச்சனை சமாதானம் சற்று நேரம் தான். மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சண்டையை தொடங்கி விடும். நாங்கள் கூட அப்படி தான். சில நேரம் சமாதானம் ஆகிவிட்டது போல் தோன்றும். ஆனால் எதோ பிரச்சனை எங்களுக்குள் சண்டையை மூட்டிவிடும். என் காதலை சொல்லிவிட்டால் இதுவும் சண்டை அடித்தளம் அமைத்து விடமோ என்ற அச்சம். அது கூட பரவாயில்லை. இனி என்னிடம் பேச நிருத்தி விட்டால் இனி சண்டைக்கு கூட வாய்பில்லாமல் போய்விடும்.

"சரி விடுடா" இப்போதைக்கு காதல் சொல்ல வேண்டாம் என்று என் மனம் சொன்னது. மனம் சொல்லும் படி நடப்போம் என்று என் வேலையை செய்துக் கொண்டு இருந்தேன். உன் தோழி ஒருத்தி என்னிடம் பேச வந்தாள். உனக்கு இப்படி ஒரு நல்ல தோழியா என்று இவளுக்காக பரிதாபம் பட்டிருக்கிறேன்.

உன் தோழியிடம் சிரித்துக் கொண்டு பேசியிருப்பதில் எனக்கு நேரம் போனதை கவனிக்கவில்லை. சற்று தோலைவில் நீ எங்களையே பார்த்துக் கொண்டு இருப்பதை கூட நான் கவனிக்கவில்லை. நீ நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும் இடத்தை நோக்கி வந்துக் கொண்டு இருந்தாய். வந்தவுடன் நீ உன் தோழியை திட்ட தொடங்கிவிட்டாய். எந்த காரணத்திற்காக உன் தோழியிடம் சண்டை போடுகிறாய் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. உனக்கு மட்டும் சண்டை போடுவதற்கு காரணம் எங்கிருந்து தான் கிடைக்குமோ என்று தெரியவில்லை.

உன் தோழியிடம் சண்டை போட்ட பிறகு நீ என்னிடம் பாய தொடங்கிவிட்டாய். நீ எதுக்காக கோபப்படுகிறாய் என்று எனக்கு புரியவில்லை. கடைசியாக நீ சொன்ன வாக்கியத்தில் புரிந்துக் கொண்டேன். "இனிமே நீ என்னை தவிர எந்த பொண்ணுக்கிட்டயும் பேசக் கூடாது. அதையும் மிறி நீ பேசுறத பார்த்தேன்... உன்ன என்ன பண்ணுவேன் எனக்கு தெரியாது" என்று மிரட்டிவிட்டு போனாய்.

ஒரு மலர் இப்படி வெடித்து விட்டதை பார்த்து பேசாமல் வாயடைத்து நின்றேன். "டாய். இப்போ உன் காதலை நீ சொல்லலேனா... ஆண் வர்கத்திற்கே அசிங்கம்.... போய் உன் காதலை சொல்லுடா!" என்று மனம் சொன்னது. "காதலைக் கூட வன்முறையில் சொல்லும் அவளிடம் மாட்டிக் கொள்ள போகிறாயா" என்று என் அறிவு என்னை பார்த்து பரிதாபப்பட்டது. அறிவு சொல்லவதை செய்வதை விட மனம் சொன்ன படி நடந்துக் கொள் என்று விவேகானந்தரின் வாக்கு. அதன் படி நானும் நடக்கிறேன்.

2 comments:

Anonymous said...

"இலங்கை தமிழர்கள் பிரச்சனை சமாதானம் சற்று நேரம் தான். மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சண்டையை தொடங்கி விடும். "

இலங்கைத்தமிழர் மீது இலங்கையரசு சமாதானம் என்ற பெயரில் குண்டுகளைத்தான் போடுகிறது. முப்பதாண்டு முடிந்தும் இன்னும் தமிழன் மீது விழுகின்ற குண்டுகளின் தொகை குறையவில்லை.

காதுலுக்குள் கரைந்த தேவைதையின் பதிவு அருமை. வாழ்த்துக்கள்.
-சாந்தி-

சரவண வடிவேல்.வே said...

"காதலைக் கூட வன்முறையில் சொல்லும் அவளிடம் மாட்டிக் கொள்ள போகிறாயா" என்று என் அறிவு என்னை பார்த்து பரிதாபப்பட்டது.....

கவிதை நயம் மிக்க எழுத்துக்கள்.. வாழ்த்துக்கள்...

Free Web Counters
வந்தவர்கள்