Wednesday, January 07, 2009

ஆங்கிலம் பேசும் தேவதை

இதோ இங்கு எனக்காக தேவதை.... தமிழ் அறியாதவள். ஆனால், தமிழர்கள் மனதை கொள்ளை அடிப்பவள். அவள் தமிழ் பேசி தான் தமிழன் மனதில் இடம் பிடிக்க வேண்டுமா ? பார்வை போதுமே ... எல்லோரையும் சாய்த்து விடுவதற்கு.... அது என்ன தமிழன் மட்டுமா அவள் அழகில் விழுவான். ஆண்மையற்றவனுக்கு கூட பார்வையால் ஆண்மை ஊட்டுபவளாயிற்றே... உலக ஆண்கள் எல்லாம் அவள் பார்வையில் விழுந்து விடுவார்கள்.

எத்தனையோ அரங்கத்தில் தலை நிமிர்ந்த தமிழ் ... இன்று முதன் முதலில் வெட்கம் பட்டிருக்கும்... உன் நாவில் நுழையாததால். நான் அதிகமாக ஆங்கிலம் பேசியதில்லை. அதற்கு இன்று தான் வருந்துகிறேன். நீ பேசுவதை எனக்கு புரிந்தும்.... என்னால் கோர்வையாக பதிலளிக்க முடியவில்லை. உன்னிடம் பேசும் போது என் மனம் எண்ணங்களோடு சண்டைப் போடுவது போல் ஆங்கிலம் என் நாவிடம் சண்டை போடுகிறது.

நான் தமிழிலே கவிதை எழுதி பழகிவிட்டேன்..... என் தமிழ் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தருவாயா ? என்று கேட்கிறாய். ஆங்கிலத்தில் எழுத்துக்களை கோர்த்து எழுத தெரிந்திருந்தால்... நான் உனக்காக ஆங்கிலத்திலேயே கவிதை எழுதியிருப்பேன்.

“தமிழ் இனி மெல்ல சாகும்” என்று எந்த கவிஞன் சொன்னான். உனக்காக தமிழ் சாவை ஏற்றுக் கொள்ளும்... தமிழில் நீ பேசுவதாக இருந்தால்.

என் தேவதை உனக்காக எத்தனை கவிதை வடித்திருக்கிறேன் தெரியுமா..? ஆனால் உன்னால் ஒன்றை கூட வாசிக்க முடியாது.

30 நாட்களில் ஆங்கிலம் கற்று தருகிறோம் என்ற சாலையோர விளம்பரத்தை பார்த்தேன். உன்னிடம் தெளிவாய் ஆங்கிலம் பேசவே அங்கிலம் கற்று வகுப்பிற்கு சேர்ந்தேன். அவர்கள் கற்று தரும் ஆங்கிலம் எனக்கு உதவாது என்று பின்பு தான் அறிந்தேன்.

நான் ரயில் வேகத்தில் ஆங்கிலம் பேசினால்.... நீ விமான வேகத்தில் பேசுகிறாய். நான் ஆங்கிலம் பேசுவதே மிக பெரிய விஷயமாக இருந்தது.... இப்பொது வேகத்தை கூட்ட வேண்டுமா ? என்றே பயந்தேன். எத்தனை பேர் காதலுக்காக வானத்தையே வலைப்பதாக சொல்வார்கள். நான் உனக்காக என் ஆங்கிலத்தின் வேகத்தை அதிகப்படுத்தாமலா இருப்பேன்.

தினமும் தமிழை மட்டுமே உச்சரித்த என் நாவு.... உன்னிடம் ஆங்கிலத்தில் பேச ஒத்திக்கை பார்த்துக் கொண்டது. தமிழில் இருக்கும் உச்சரிப்பு கடினம் இதில்லை.... இருந்தும் உன்னை பார்த்தால் என் நாக்கு குழைகிறது. பரவாயில்லை..... என் தவறுகளை சரி செய்ய நீ இருக்கிறாயே.... என் குழைந்த நாக்கை சரி செய்ய நீ இருக்கும் போது என் நாக்கு எப்படி குழைந்தால் எனக்கென்ன ?

No comments:

Free Web Counters
வந்தவர்கள்