Monday, September 22, 2008

கண்ணீர்

கண்ணீரில் வாழும் மனிதனே !
உன் கண்ணீரால்
கடல் நீர் உப்பாகி விட்டது !

பிறக்கும் போது
ஏன் பிறந்தோம் என்று கண்ணீர் !
ஐந்து வயதில்
ஒரு பொம்மைக்காக கண்ணீர் !

பத்து வயதில்
படிப்பதற்காக கண்ணீர் !
பதினைந்து வயதில்
மதிப்பெண்ணுக்காக கண்ணீர் !

இருபது வயதில்
பெண்ணின் காதலுக்காக கண்ணீர் !
இருபத்தைந்து வயதில்
வேலைக்காகக் கண்ணீர் !

முப்பது வயதில்
திருமணத்திற்காக கண்ணீர் !
முப்பத்தியைந்து வயதில்
திருமணம் செய்துக் கொண்டதற்காக கண்ணீர் !

நாற்பது வயதில்
பிள்ளை பெறுவதற்காகக் கண்ணீர் !
நாற்பத்தைந்து வயதில்
பணத்துக்காகக் கண்ணீர் !

ஐம்பது வயதில்
பிள்ளைகள் எதிர்காலத்துக்காகக் கண்ணீர் !
ஐம்பத்தைந்து வயதில்
பிள்ளை திருமணத்துக்காக கண்ணீர் !

அறுபது வயதில்
முதியோர் இல்லத்தில் கண்ணீர் !
அறுபத்தைந்து வயதில்
மரணத்தைக் கண்டு கண்ணீர் !

உன் கண்ணீரால்
கடல் நீர் உப்பாகி விட்டது !
இறைவா !
எனக்கு இன்னொரு உலகம் கொடு !
அங்கு சிரிக்கும்
மனிதர்களை மட்டும் கொடு !
சர்க்கரை போல் இனிக்கும்
கடலைக் கொடு !

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலில் 10வது கவிதை

Wednesday, September 17, 2008

முதியோர் இல்லம்

ருசி பார்க்க பற்களில்லை
தோள் கொடுக்க தோழன் இல்லை
ஆதரவாய் பேச பிள்ளைகளும் இல்லை
முதியோர்களுக்குக் கிடைத்தது
முதியோர் இல்லம் என்னும்
திறந்த வேலி சிறைவாசம் !

ஆயுள் முடியும் காலத்தில்
ஆயுள் முடியும் வரை
இங்கு உள்ளவருக்கு விடுதலையில்லை !

பிள்ளைகளின் குடை
நிழல் கொடுக்க மறுக்க
திறந்த இடத்தில்
நிழலை தேடுகிறார்கள் !

தவளமும் வயதில்
நடைபயில கைகள் தேடினான் !
பத்து வயதில்
விளையாட நண்பர்கள் தேடினான் !
வாலிப பருவத்தில்
கன்னி மனதில் இடம் தேடினான் !

தந்தையானதும் பிள்ளைக்கு
பள்ளியில் இடம் தேடினான் !
வேலை ஓய்வுக்கு முன்பு
தன் மகளுக்கு மாப்பிள்ளை தேடினான் !

இறுதிவரை முதியோர் இல்லத்தில் இருக்கும்
அவன் பெற்றோரைத் தேடவில்லை !
ஆனால்,
அவன் இறுதி மூச்சு பிரிந்தது
முதியோர் இல்லத்தில் தான் !

- நான் எழுதிய "உறங்காத உணர்வுகள்" நூலில் 11வது கவிதை
Free Web Counters
வந்தவர்கள்